Tuesday, February 23, 2010

வரப்போகிறது பெண்களுக்கான வயாகரா...!


சர்வதேச பாலியல் மருத்துவக் கருத்தரங்கில் அது ஒரு விறுவிறுப்பான கட்டம்.
- நாளுக்கு நாள் ஆண்களுக்கு விரைப்புத்தன்மை குறைந்து போக என்ன காரணம்?
- அந்த குறைபாட்டிற்கு காரணம் மனதா, உடலா?
- அதனைக் கண்டறிவது எப்படி?
- சரி செய்வது எப்படி...?
- இப்படி கேள்விகள் டாக்டர்களிடமிருந்து பறந்து வந்து கொண்டிருக்க, நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தார், டாக்டர் கணேசன் அடைக்கண். இவர் சர்வதேச பாலியல் ஆராய்ச்சி நிபுணர். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மகப்பேறு துறை டாக்டர்.
இத்தகைய மாநாடுகள் ஒருபுறம். சர்வதேச செக்ஸ் ஆராய்ச்சிகள் மறுபுறம். இவை எல்லாம் நடந்து கொண்டே இருந்தாலும்... சமூகம் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் குறைந்திருக்கின்றனவா?
- இல்லை.
இளம் வயதிலேயே உடலுறவு வைத்துக் கொள்வது, திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரிப்பது, திருமணத்திற்கு முந்தைய நாள் காதலனோடு ஓடிப்போய் விடுவது, திருட்டுக் காதலை தொடர கணவரையே கொலை செய்வது என்பதெல்லாம் நடந்து கொண்டேதானே இருக்கின்றன. இன்னொரு புறத்தில் செக்சில் திருப்தி அடையும் மனைவிகளின் எண்ணிக்கை குறைகிறது. விவாகரத்துக்கள் அதிகரிக்கிறது.
-இவைகளை எல்லாம் கேள்விகளாக்கி, மனதில் வைத்துக் கொண்டு டாக்டர் கணேசன் அடைக்கண் அவர்களிடம் கேள்விகளை தொடர்ந்தோம்...!

நீங்கள் வயாகராவில் இருக்கும் `நைட்ரிக் ஆக்சைடு' செயல்பாடு பற்றி ஆராய்ச்சி செய்து உலகத்திற்கு உணர்த்தினீர்கள். தற்போது பெண்களுக்கான வயாகரா கண்டுபிடிப்பு எந்த நிலையில் இருக்கிறது?

ஆண்களுக்கான வயாகரா எப்படி செயல்படுகிறது என்பதை முதலில் விளக்குகிறேன். செக்சின் அடிப்படையே ஆசைதான். ஒரு ஆண், இன்னொரு பெண்ணோடு உடலுறவு கொள்ள நினைக்கும் போது ஆணின் நரம்பு நாளங்களில் `நைட்ரிக் ஆக்சைடு' என்ற வாயு திரவம் உருவாகும். அப்போது செல்களில் இருக்கும் `சைக்கிளிங் சி.ஜி.எம்.பி.' என்பது ஆண்குறி திசுக்களை நீளச்செய்யும். அப்போது உடலில் இருந்து, `போஸ்போ டை எஸ்டரேஸ்' என்பது சுரந்து உடலுறவு ஆசையை குறைக்கும் விதமாக செயல்படும். வயாகரா சாப்பிட்டால், இந்த ஆசைக் குறைப்பு திரவத்தை சுரக்காமல் செய்யும். சைக்கிளிங் சி.ஜி.எம்.பி.யை அதிகரிக்கச் செய்யும். இதில் நைட்ரிக் ஆக்சைடு வாயு திரவம் செக்ஸ் செயல்பாட்டிற்கு உந்துதலாக இருக்கும் என்பதை நான் கண்டுபிடித்தேன்.

இனி பெண்களின் பிரச்சினை பற்றி சொல்கிறேன். பெண்களின் செக்ஸ் ஆசைகள், தூண்டுதல், உச்சகட்டம் போன்றவைகளைப் பற்றிய ஆய்வுகள் மிக மந்த கதியில் தான் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு காரணம் ஆண்களின் சுயநலம். ஒரு ஆணுக்கு செக்சில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை அவனது ஜோடியான பெண்ணால் கண்டுபிடித்து விட முடியும். அவளுக்கு இருக்கும் குறைப்பாட்டை அவளே கண்டுபிடித்தாலும், வெளியே சொல்வதில்லை. கலவி என்பது ஆண்- பெண், சமூகம் சார்ந்த பிரச்சினை. அதனால் பெண்களுக்கும் வயாகரா போன்ற தூண்டுதல் மருந்துகள் தேவை என்பது உணரப்பட்டிருக்கிறது.

பெண்களின் வயாகரா கிட்டத்தட்ட கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அது, பெண்களின் மூளையில், உடல் இயக்கத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களை அமெரிக்காவில் ஆராய்ந்து இறுதி முடிவுக்கு வந்திருக்கிறார்கள். மனித குரங்குகளைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இன்னொரு கேள்வி, பெண்கள் தரப்பில் இருந்து எழுப்பப்பட்டிருக்கிறது.

`நாங்கள் செக்சில் திருப்தி அடையவில்லை என்பது போன்ற மாயையை உருவாக்கி, எங்களுக்கு மருந்து தயாரிக்கிறீர்கள். அதன் மூலம் நாங்கள் செக்ஸ் பற்றியும், தூண்டுதல் மருந்து பற்றியுமே அதிகமாக சிந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்' என்று சொல்கிறார்கள். இதுவும் சிந்திக்க தகுந்ததாக இருக்கிறது. பெண்களுக்கான வயாகரா இரண்டு ஆண்டுகளுக்குள் விற்பனைக்கு வந்துவிடும்.''

பெண்களின் ஆசையைத் தூண்டும் மருந்துகள் வந்து விட்டால், அதை பெண்களுக்கு தெரியாமலேயே பானங்களில் கலந்து கொடுத்து பெண்களை ஆண்கள் வீழ்த்தும் நிலை உருவாகி விடுமே?

``இதுவும் சிந்திக்க வேண்டிய விஷயம்தான். ஆனால் ஆண்களுக்கு தெரியாமல் வயாகராவை கலந்து கொடுத்து, அவர்கள் ஆசையைத் தூண்டும் விதத்தில் இதுவரை எந்த சம்பவமும் நடக்கவில்லை. அதனால் பெண்களை மாத்திரைகளால் வசீகரிக்கும் வாய்ப்பு குறைவுதான். இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்கள் மூளையில் (அதாவது மனதில்) ஆசை உருவானால்தான் உடலால் அதை வெளிப்படுத்த முடியும். அதனால் மனமிருந்தால் தான் செக்சில் மார்க்கம் உண்டு.''

திருமணத்திற்கு முந்தைய நாள் பெண்கள் பழைய காதலனோடு ஓடிவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறதே? எப்படி தடுப்பது?

``சமூகம் மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் இது. ஒரு பெண்ணுக்கு நெருக்கடி கொடுத்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்யும் போது அவள் காதலனை மறக்க முடியாமலும், புதிதாக வரப்போகும் கணவனைஏற்றுக் கொள்ள முடியாமலும் தவிப்பாள். தொடக்கத்தில் எது சரி என்று தெரியாமல் குழம்பி, நாட்களை கடத்தி விட்டு, திருமணத்திற்கு முந்தைய நாள் அவளுக்கு இறுதி கெடுவாகி விடுகிறது. அன்று அவள் ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. காதலனே சிறந்தவன் என்று நினைப்பதால் அவனோடு சென்று விடுகிறாள்.
சீன வரலாற்றைப் பார்த்தால் கடந்த 100 ஆண்டுகளாக அங்கே காதல் திருமணங்கள்தான் நடக்கின்றன. அதனால் திருமண வயது ஆனதும் அங்குள்ள பெண்கள் தங்கள் தேடுதல் வேட்டையைத் தொடங்கி விடுகிறார்கள். 2,3 வருடங்கள் பழகிப்பார்ப்பார்கள். அப்படி பழகுவதற்கு `கோட்ஷிப்' என்று பெயர். பழகிப் பார்த்து திருமணம் செய்துகொள்வார்கள். 30 வயது வரை ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் பெற்றோர்கள் அவளுக்கு நல்ல நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பார்கள். அதுதான் அவர்கள் வேலை. இந்த மாதிரியான நிலை இந்தியாவிற்கு வர இன்னும் 100 ஆண்டுகள் ஆகும். அதுவரை இந்த மாதிரியான ஓட்டங்கள் தொடரத்தான் செய்யும்.

அவள் அப்படி ஓடாமல், தனக்கு பிடிக்காதவரை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை முழுவதும் திருப்தியில்லாமல் போராடும் நிலை ஏற்படலாம். அதனால் இருவரும் நிம்மதியை இழந்து விவாகரத்து செய்யும் நிலையும் ஏற்படலாம். அதனால் ஆணோ, பெண்ணோ தைரியமாகத் தன் காதலை வெளிப்படுத்த வேண்டும்'' என்கிறார் டாக்டர் கணேசன் அடைக்கண்.



லண்டன் பேராசிரியர் டாக்டர் டோனி வார்னே,
டாக்டர் காமராஜ், டாக்டர் எலிசபெத் ஆகியோருடன்...
மாநாட்டை நடத்திய பிரபல செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் டி.காமராஜிடம் கள்ளக்காதல் கொலைகளைத் தடுக்க, மாநாடு எந்த அளவில் துணைபுரியும் என்று கேட்டபோது அவர் கூறியதாவது:-

``திருமண வாழ்க்கையில் சிக்கல் ஏற்படாதவாறு தொடக்கத்தில் இருந்தே கவனிக்க வேண்டும். காதலிக்கும் பெண்ணை கட்டாயப்படுத்தி இன்னொருவருக்கு கணவராக்க முயற்சிக்கும் போது, `காதலர் நல்லவர். திருமணத்தின் மூலம் அவரை இழக்கிறோம்' என்ற எண்ணமும், புதிதாக வரும் கணவரை நாம் ஏமாற்றுகிறோம் என்ற எண்ணமும் ஏற்படும். சில பெண்களுக்கு `நம்மை ஏமாற்றி இன்னொருவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்' என்ற எண்ணம் உருவாகும்.

அவள் பெற்றோருக்கு பயந்து, அவர்கள் பேசி முடிப்பவரை திருமணம் செய்து கொண்டால் காதலனை ஏமாற்றிய குற்ற உணர்வு தோன்றும். அதனால் திருமணத்திற்குப் பிறகு அந்த கணவனை தொட விடமாட்டாள். காதலனை நினைத்துக் கொண்டே கணவரோடு வாழ்வாள். இதே நிலை கணவனுக்கு ஏற்பட்டால் அவன் காதலியை நினைத்துக் கொண்டு மனைவியோடு பெயரளவுக்குத்தான் வாழ்வான். இப்படிப்பட்ட வாழ்க்கையில் அன்பும், திருப்தியும் குறையும் போது புதிய நபர் அவர்களின் வாழ்க்கைக்குள் பிரவேசமாகிறார்கள் அல்லது பழைய காதலனோடு மீண்டும் தொடர்பு ஏற்படுகிறது.

முற்காலத்தில் பெண்கள் முழுமையாக ஆண்களை சார்ந்திருந்தார்கள். அதனால் சொல், செயல் எல்லாவற்றிலும் ஆணாதிக்கம் இருந்தது. பெண்கள் வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக் கொண்டார்கள். 2-வது உலகப் போருக்கு பின்பு எக்கச்சக்கமான ஆண்கள் இறந்து விட்டதால் பெண்கள் வேலைக்கு வந்தார்கள். பொருளாதார சுதந்திரம் கிடைத்தது. பின்பு கருத்தடை மாத்திரைகள் விற்பனைக்கு வர பெண்களுக்கு செக்ஸ் சுதந்திரமும் கிடைத்தது. இதனால் பெண்கள் சமூகம் முற்றிலும் மாறி விட்டது.

அந்த மாற்றங்களை ஆண்கள் புரிந்து கொண்டு, தங்களை முழுமையாக மாற்றிக் கொள்ள வேண்டும். பெண்கள் முழு சந்தோஷத்தோடும், திருப்தியோடும் வாழும் சூழலை அவர்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் தான் சமூகச் சிக்கல்களைத் தீர்க்க முடியும். திருட்டுக்காதல் தொடர்புடைய வன்முறைகளை போக்க முடியும். இதற்கு அன்பை சேமிக்கும் காதல் வங்கி துணை புரியும்'' என்கிறார்.

நன்றி : தினத்தந்தி

No comments: